spacer
spacer
 
Economic Benefits of Sethu Samudram PDF Print E-mail

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும்

தமிழ் சசி 

 

 

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

http://blog.tamilsasi.com/2007/09/economic-benefits-of-sethu-samudram.html

 

 
< Prev